சிட்னி,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்காக ரூ.11.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.