“காசாவில் மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” – டொனால்டு ட்ரம்ப்

காசா சிட்டி: “நாங்கள் காசாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டாவது பதவிக் காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வளைகுடா நாடுகளில் தொடங்கிய ட்ரம்ப், முக்கிய நட்பு நாடான இஸ்ரேலை தவிர்த்துவிட்டார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் மார்ச் மாதத்தில் முறிந்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் முழு அளவிலான தாக்குதலை தொடங்கியது. இது அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறையை கடுமையாக்கி உள்ளதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் காசாவைப் பார்த்து வருகிறோம். அதை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நிறைய பேர் பட்டினியால் வாடுகிறார்கள்,” என்று கூறினார்.

காசாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 74 பேர் கொல்லப்பட்டதாகவும், ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்ததால் டஜன் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“நாங்கள் வசிக்கும் இடம் அருகே திடீரென குண்டு வெடித்தது. எல்லோரும் ஓடத் தொடங்கினர். எங்கள் கண்களால் அழிவைக் கண்டோம். எல்லா இடங்களிலும் ரத்தம், உடல் பாகங்கள் மற்றும் சடலங்கள் இருந்தன. யார் இறந்துவிட்டார்கள், யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.” என்று வடக்கு காசாவில் வசிக்கும் 57 வயதான உம் முகமது அல்-தடாரி தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு இரவு முழுவதும் தொடர்ந்ததாக மற்றொரு குடியிருப்பாளரான 33 வயதான அகமது நஸ்ர் கூறினார். “எங்களால் தூங்கவோ நிம்மதியாகவோ இருக்க முடியவில்லை. பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்திலும் நாங்கள் இறக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.