புதுடெல்லி: “தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை குறித்து ஐ.நா.பாதுகாப்பு குழு உறுப்பு நாடுகள் மற்றும் முக்கியமான நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்க செல்ல இருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதற்கு சசி தரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நாட்டின் பார்வையை முன்வைப்பதற்காக ஐந்து முக்கிய தலைநகரங்களுக்கு செல்ல இருக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமையேற்க மத்திய அரசு அழைத்திருப்பதற்கு பெருமை கொள்கிறேன். தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்; ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அனைத்துக் கட்சி குழு குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற எங்கள் பகிரப்பட்ட செய்தியை எடுத்துச் செல்லும் ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய கூட்டாளி நாடுகளுக்குச் செல்வார்கள். வேறுபாடுகளுக்கு அப்பால், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சசி தரூருடன், ரவி சங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக), கனிமொழி கருணாநிதி (திமுக), சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் பிரதிநிதிகளை வழிநடத்தும் மற்ற எம்.பி.க்களாவர்.
இவர்கள் தலைமையிலான ஒவ்வொரு குழுவிலும் 5–6 எம்.பி.க்கள் இருப்பார்கள் என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கு இவர்கள் பயணம் செய்வார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் மே 22 க்குப் பிறகு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.