India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
India A vs England Lions: 3 போட்டிகள்…
இந்நிலையில், அதற்கு முன் இந்தியா A அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்தியா A அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளை விளையாட இந்தியா A அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேலும், இந்திய சீனியர் அணியுடனும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா A அணி விளையாடுகிறது.
இங்கிலாந்து லயன்ஸ் – இந்தியா A முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி மே 30ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கேன்டர்பரி நகரிலும், 2வது போட்டி ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நார்தாம்ப்டன் நகரிலும் நடைபெறுகிறது.
இந்திய சீனியர் உடனான பயிற்சி ஆட்டம் ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை பெக்கன்ஹாம் நகரிலும் நடைபெறுகிறது. அந்த வகையில், 20 வீரர்கள் அடங்கிய இந்தியா A அணி நேற்றிரவு (மே 16) பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது.
India A Squad: இந்தியா A ஸ்குவாட்
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரேல் (துணை கேப்டன்) (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. மேலும், சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முதல் போட்டியை தவிர அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India A Team: சீனியர்கள் இல்லாத இந்திய அணி
ரோஹித், விராட் கோலி, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருப்பதால் இளம் இந்திய அணியே இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் சுப்மான் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட சீனியர்கள் இருக்கின்றனர்.
India A Team: ஷ்ரேயாஸ், அர்ஷ்தீப் இல்லை… ஏன்?
இருப்பினும் தற்போது இந்தியா A அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறாதது பெரியளவில் விமர்சனத்தை எழுப்பி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் சீனியர் என்பதை தாண்டி தற்போது நல்ல ரிதமில் இருக்கிறார். இந்திய மிடில் ஆர்டரின் பலவீனத்தை போக்க தற்போது இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தேவை.
அவர் மட்டுமின்றி அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) இங்கிலாந்தின் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்றவர். ஆனால் அவருக்கு பதில் கலீல் அகமதிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துஷார் தேஷ்பாண்டேவும் தேவையில்லாத ஆணி என கூறப்படுகிறது.
India A Team: எதற்கு ருதுராஜ் கெய்க்வாட்?
அதே நேரத்தில், சுப்மான் கில் (Shubman Gill), சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன் என பல ஓப்பனர்கள் இருக்கும் வேளையில், ருதுராஜ் கெய்க்வாட்டை ஏன் ஸ்குவாடில் சேர்த்துள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) ரஞ்சியிலும் சிறப்பாக விளையாடவில்லை. அவர் 6 இன்னிங்ஸில் 1 சதம் உள்பட 330 ரன்களையே அடித்திருந்தார்.