ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புவனேஸ்வர்: ஒடிசா முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட மின்னல் தாக்குதல் சம்பவங்களில் ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூன்று பேர், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா இரண்டு பேர், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக மாநில அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோராபுட் மாவட்டத்தில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஒரு தற்காலிக குடிசையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது குடிசையில் மின்னல் தாக்கியதில் மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜாஜ்பூர் மாவட்டத்தில், தர்மசாலா பகுதியில் தாரே ஹெம்ப்ரம் (15) மற்றும் துக்குலு சத்தார் (12) ஆகிய இரு சிறுவர்கள் வீட்டின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பரிதா கிராமத்தில் ஓம் பிரகாஷ் பிரதான் என்ற 7 ஆம் வகுப்பு மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். பெலகுந்தா பகுதியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் மாம்பழங்களை சேகரிக்கும் போது 23 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

முன்னதாக, கோராபுட், கட்டாக், குர்தா, நயாகர், ஜாஜ்பூர், பாலசோர் மற்றும் கஞ்சம் உள்ளிட்ட ஒடிசாவின் பல மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை மற்றும் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.