பெங்களூரு,
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலால் தடைபட்ட நடப்பு ஐ.பி.எல். தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. பெங்களூருவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதவிருந்தன.
ஆனால், பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
நடப்பு ஐ.பி.எல். தொடர்பில் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலை நிலவியது. ஆனால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா இழந்தது.
தற்போதைய நிலவரப்படி, பெங்களூரு, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய 6 அணிகள் பிளே ஆப் வாய்ப்பில் உள்ளன. இதில், 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல உள்ளன. குறிப்பாக, பெங்களூரு, குஜராத் அணிகள் பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.