India National Cricket Team: ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் இந்திய ஆடவர் சீனியர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.
Team India: இந்திய ஏ அணியும் பயணம்
அதற்கும் முன் இந்தியா ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா ஏ அணிக்காக 20 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் கடந்த மே 16ஆம் தேதி அன்று பிசிசிஐ அறிவித்தது. அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாகவும், துருவ் ஜூரேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஸ்குவாடில், இந்திய பிரதான அணியில் விளையாடக்கூடிய பல முன்னணி வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மான் கில், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கில் மற்றும் சுதர்சன் 2வது போட்டியில் அணியுடன் இணைவார்கள்.
Team India: அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
குறிப்பாக, இந்தியா ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும், இந்திய பிரதான அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாட இருக்கிறது. ஜெய்ஸ்வால், சுப்மான் கில்லுக்கும், சாய் சுதர்சனுக்கும் பிரதான அணியில் நிச்சயம் இடம் உறுதி எனலாம்.
இந்தியா ஏ அணியில் பலரின் கவனம் ருதுராஜ் கெய்க்வாட், கருண் நாயர், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான் அன்ஷூல் கம்போஜ், சர்ஃபராஸ் கான், கலீல் அகமது உள்ளிட்டோரின் மீது உள்ளது எனலாம். இந்நிலையில் வரும் மே 20ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
Team India: இந்திய அணி அறிவிப்பு எப்போது?
இருப்பினும், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் சற்று தாமதமாக தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய அணியை அறிவிக்கும் தேதி சற்று ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, மே 23ஆம் தேதி அன்று பிசிசிஐ இந்திய அணியை அறிவிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 15 அல்லது 18 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Team India: இந்திய அணியின் கேப்டன் யார்?
ஐபிஎல் தொடர் முடிந்த உடனேதான் இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும். ரிஷிகேஷ் கனித்கர் இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். அந்த வகையில், ஜூன் முதல் வாரத்தில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் பயணம் மேற்கொள்ளும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.