IPL 2025 Playoff Qualification: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அடுத்து மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி இடையேயான போட்டி பாதியில் நிறுத்துப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டது.
IPL 2025: தகுதிபெற்ற 3 அணிகள்
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (மே 17) ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கியது. ஆனால் அன்றும் ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. கொல்கத்தா அப்போதே தொடரில் இருந்து வெளியேறியது.
நேற்று நடந்த இரண்டு லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணியை பஞ்சாப் வீழ்த்தியதன் மூலமும், டெல்லி அணியை குஜராத் அணி வீழ்த்தியதன் மூலமும் நேற்று ஒரே நாளில் 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்த மூன்று அணிகளுக்கும் தலா 2 போட்டிகள் உள்ளன. இதனால், முதலிரண்டு இடங்களை பிடிக்கவும் கடும் போட்டி நிலவும். ஏனென்றால் முதலிரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே குவாலிஃபயர் 1 போட்டிக்குச் செல்ல முடியும். ஒருவேளை தோற்றாலும் மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.
IPL 2025: ஒரு இடத்திற்கு முட்டிமோதும் 3 அணிகள்
ஆர்சிபி அணி 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு முறை மட்டுமே முதலிரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. எனவே இந்த முறை அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று முதலிரண்டு இடங்களை பிடிக்க ஆர்சிபி முயற்சிக்கும். பஞ்சாப் அணியும் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இந்த ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் தற்போது முட்டிமோதுகின்றன. மும்பை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கே தற்போது வாய்ப்புள்ளது. இதில் மும்பை அணிக்கு டெல்லி மற்றும் பஞ்சாப் உடனும், டெல்லி அணிக்கு மும்பை மற்றும் பஞ்சாப் உடனும், லக்னோ அணிக்கு ஹைதராபாத், குஜராத், ஆர்சிபி அணிகளுடனும் போட்டிகள் உள்ளன.
IPL 2025: இன்றைய போட்டி
இன்று லக்னோ – ஹைதராபாத் போட்டியில் ஒருவேளை லக்னோ தோல்வியடைந்துவிட்டால் நிச்சயம் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கே வாய்ப்புகள் அதிகம் எனலாம். ஒருவேளை இன்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்துவிட்டால், மே 21ஆம் தேதி நடைபெறும் மும்பை – டெல்லி போட்டி ஒரு நாக்-அவுட் போட்டியாக அமையும் எனலாம்.
IPL 2025: இந்த ஒரு போட்டி ரொம்ப முக்கியம்
இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கே நான்காவது இடத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதற்கு பின்னர் மும்பை அணிக்கும், டெல்லி அணிக்கும் பஞ்சாப் அணி உடன்தான் போட்டிகள் உள்ளன. ஒருவேளை இந்த இரண்டு அணிகளும் பஞ்சாபை வீழ்த்திவிட்டால் இந்த போட்டியில் வெற்றிபெற்ற அணிதான் பிளே ஆப் போகும். அந்த வகையில், ரசிகர்கள் நாளை மறுதினம் நடைபெறும் மும்பை – டெல்லி போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | “தோனி ஒரு தேசத்துரோகி”.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?