புதுடெல்லி: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் குட்டநாடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெங்காயத் தாமரை எனப்படும் ஆகாயத் தாமரையை (Water hyacinth) அகற்றுவதை 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நடவடிக்கையாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நீர்நிலைகளை பாதிக்கும் நீர்வாழ் களையான ஆகாயத் தாமரையை அகற்றுவதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் அனுமதிக்கப்படும் பணிகளின் பட்டியலில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டியுள்ள சிவராஜ்சிங் சவுகான், “ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஆகாயத் தாமரையை அகற்றுவது அனுமதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை அமைச்சகம் பரிசீலித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) சட்டம், 2005 இன் அட்டவணை 1, பத்தி 4(3) இன் படி, புல், கூழாங்கற்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்ற உறுதியற்ற, அளவிட முடியாத மற்றும் மீண்டும், மீண்டும் நிகழும் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது.
நீர்நிலைகளில் இருந்து ஆகாயத் தாமரையை அகற்றுவது அட்டவணை 1 பத்தி 4(3) இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வேலை வகைகளைப் போன்றது என்பதால், இத்திட்டதின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிப் பட்டியலில் அதைச் சேர்க்க முடியாது.” என்று விளக்கமளித்துள்ளார்.
அமைச்சகத்தின் விளக்கம் மற்றும் பதில் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள எம்.பி கொடிகுன்னில் சுரேஷ் “குட்டநாட்டில் ஆகாயத் தாமரை ஒரு கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சவாலாக மாறியுள்ளது. இது விவசாயிகள் மற்றும் மீனவர்களைப் பாதிக்கிறது மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கிறது. இது விவசாயம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் இந்த அச்சுறுத்தலை நீக்குவதற்கான வேலை வாய்ப்புகளை மறுப்பது கிராமப்புற சமூகங்களுக்கு பெரும் அநீதியாகும்.
மத்திய அரசு இந்த வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து, ஆகாயத் தாமரையை அகற்றுதல் போன்ற சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைச் சேர்க்க அனுமதிக்கும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீர்வாழ் களைகளை கைமுறையாக அகற்றுவது ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கும். மேலும் குட்டநாட்டின் சிதையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் உதவும்” என்று கூறினார்.