சேலம்: கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அரக்கோணம் – சேலம்- அரக்கோணம் ரயில் சேவை, 12 நாட்களுக்குப் பின்னர் நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்குகிறது.
சேலம்- அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலின் சேவை, கடந்த 8-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 12 நாட்களாக இயக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம்- அரக்கோணம் இடையிலான ரயில் சேவை நாளை (20-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அரக்கோணம்- சேலம் (எண். 16087) பயணிகள் ரயிலானது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் நாளை அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை காலை 10.50 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில், சேலம்- அரக்கோணம் (எண்.16088 ) பயணிகள் ரயிலானது, நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம் ரயில் நிலையத்தை இரவு 8.45 மணிக்கு சென்றடையும்.
இதேபோல், இவ்விரு ரயில்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.