‘அடையாளம் தெரியாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது’ – ஆதார் ஆணையம்  

சென்னை: இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது சாத்தியமற்றது என உயர் நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அடையாளம் தெரியாத இறந்த நபர் ஒருவரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அவரது கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கில் ஆதார் ஆணையத்தின் துணை இயக்குநர் பிரியா ஸ்ரீகுமார் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களை முறையாக கணக்கிட்டு அவர்களுக்கு நிதி மற்றும் அரசின் பிற மானியங்கள், சேவைகள் உண்மையான பயனாளிகளுக்கு வெளிப்படையாக சென்றடையும் வகையில் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் எண்களுடன் சட்ட ரீதியிலான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த 2016-ல் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி தனி நபர்களின் பிரத்யேக ஆதார் தொடர்பான சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் பயோ மெட்ரிக் தகவல்களை வேறு எந்த காரணங்களுக்காகவும் மற்றவர்களுக்கு பகிர இயலாத அளவுக்கு சட்ட ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்காக தனிநபர் குறித்த விவரங்களை உறுதி செய்வதே ஆதாரின் நோக்கமேயன்றி, தனிநபர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது ஆணையத்தின் நோக்கம் அல்ல.

அதேபோல அடையாளம் தெரியாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பரிசோதித்துப் பார்க்கவும் இயலாது. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அந்த தனி நபரின் கருத்தை கேட்டறிந்த பின்னரே அவர் தொடர்பான விவரங்கள் பகிரப்படும். தடயவியல் பரிசோதனைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனிநபரது கருவிழி மற்றும் கைரேகை தகவல்களை ஆணையம் சேகரிப்பதில்லை என்பதால் இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது என்பது சாத்தியமற்றது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12-க்கு தள்ளி வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.