மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இப்போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார். என்றாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் 2 மணி நேரம் பேசினார். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் புதின் கூறுகையில், “மூன்று ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளோம். ஆனால் அமைதியை நோக்கிய எந்தவொரு முன்னேற்றத்துக்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது அவசியம்.
ரஷ்யா உடனடியாக நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்று உக்ரைன், அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்கா இணைந்து வலியுறுத்தியுள்ளன.
பொருத்தமான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால், போர்நிறுத்தம் நிச்சயமாக சாத்தியமாகும். பிரச்சினக்கான மூல காரணங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாகும்” என்றார்.
உக்ரைனின் 20 சதவீத நிலப்பகுதி தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது, கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க வேண்டும். தற்போது போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் தங்களிடமே நீடிக்க அனுமதிக்க வேண்டும், மேலும் உக்ரைனின் 4 பகுதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த நிபந்தனைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது.