சென்னை: நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.நீ்ட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பழனிசாமி: சேலம் சூரமங்கலம் அருகே ஒரு மாணவர், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 24 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என்று அவர்கள் கூறியது அனைத்தும் பொய்யாகும். இதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுகவின் நாடகத்துக்கு மாணவர்கள் பலியாகக் கூடாது. தங்களது பெற்றோர் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மாணவர்கள் உணர வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நீட் தேர்வு பயத்தால் சேலத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தேர்வு மாணவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. நடப்பாண்டில் மட்டும் நீட் தேர்வுக்கு அஞ்சி 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால், மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்வதையும் தடுக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தால் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. எனவே, நீட் தொடர்பான நாடகங்களை நிறுத்திவிட்டு, அதை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்துக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும்.