புதுடெல்லி: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், “பிஎம் ஸ்ரீ( PM SHRI) திட்டத்துக்கான நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. தேசியக் கல்விக் கொள்கையை(NEP-2020) ஏற்றால் மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. தேசியக் கல்விக் கொள்கை மும்மொழி திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு இரு மொழி கொள்கையை கொண்டுள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம், மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக் ஷா அபியான் – எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் நிதி பெறும் மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. கல்வி நிதியை நிறுத்துவது, கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம். தேசியக் கல்விக் கொள்கையை மாநிலம் முழுவதும் முழுமையாக செயல்படுத்தவும், மாநிலத்தில் பின்பற்றப்படும் கல்வி முறையில் இருந்து விலகவும் மாநிலத்தை கட்டாயப்படுத்த மத்திய அரசு முயல்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2,151 கோடி வழங்கப்படாததால், இத்திட்டத்தை செயல்படுத்துவதை கடுமையாகப் பாதித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை மாநிலத்தில் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்களையும் பாதித்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் செலவினங்களுக்காக வாரியம் மொத்தம் ரூ.3585.99 கோடியை ஒதுக்கியிருந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கல்வி நிதியை பெறுவதற்கான உரிமையை தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ ஆகியவற்றுடன் இணைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது என்று அறிவிக்க வேண்டும். மே 1, 2025 முதல் இந்த ஆணை நிறைவேற்றப்படும் தேதி வரை அசல் தொகையில் ஆண்டுக்கு 6% வட்டியுடன் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு ரூ. 2291 கோடியை மாநிலத்திற்கு செலுத்த உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.