“சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் நீதித்துறை சேவையில் சேர அனுமதித்ததால், பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது” என இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் குறிப்பிட்டுள்ளார்.

Court- Representational Image

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் ஏ.ஜி.மாசிஹ், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதிகளுக்கு நடைமுறை நீதிமன்ற அனுபவத்தை உறுதி செய்வதன் மூலம் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுத குறைந்தபட்சம் மூன்றாண்டு அனுபவ பயிற்சி தேவை என கருதுவதாக குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுதும் ஒவ்வொரு வேட்பாளரும் நிச்சயம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளைத் திருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

மேலும், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை 10 ஆண்டுகள் அனுபவமுள்ள மூத்த வழக்கறிஞர்கள் அல்லது நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.

புதிய சட்ட பட்டதாரிகளால் வழக்கறிஞர் அனுபவமில்லாமல் நீதிபதிக்கான தேர்வுகள் எழுத இயலாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞரின் பயிற்சி காலத்தை சட்ட பட்டதாரியின் வழக்கறிஞர் தற்காலிக சேர்க்கை தேதியிலிருந்து கணக்கிடலாம். இருப்பினும், இந்த நிபந்தனை இனி வரும் ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஆட்சேர்ப்பை இந்த உத்தரவு பாதிக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.