புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுக்களை அனுப்புவது பிரதமர் மோடியின் ‘திசைத் திருப்பும் விளம்பர பயிற்சி’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளின் குழுக்களை அனுப்புவது மற்றுமொரு கவனத்தை திசைத் திருப்பும் முயற்சியாகவே நான் கருதுகிறேன். இது ஒரு விளம்பர பயிற்சி. நாங்கள் பயங்கரவாதம், பயங்கரவாத தாக்குதல், சீனா, பாகிஸ்தான் குறித்த உண்மையான பிரச்சினைகளை எழுப்புகிறோம். அரசு ஏன் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவில்லை?
ஏப்.22-ம் தேதியில் இருந்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த வலியுறுத்தி வருகிறோம். இரண்டு கூட்டங்கள் நடந்தது. இரண்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பஹல்காம் தாக்குதல் குறித்து எழும் அரசியல் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
சீனப் பிரச்சினை குறித்தும் நாம் இன்னும் விவாதிக்கவில்லை. இதற்கு மத்தியில், கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக அவர்கள் (மத்திய அரசு) சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளனர். அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை அறிவித்துள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு விளக்கம் அளிப்பதற்காக முக்கிய நட்பு நாடுகளுக்குச் செல்ல இருக்கும் முதல் 3 அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் தங்களின் பயணத்தைத் தொடங்கும் என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏழு பிரதிநிதிகள் குழுக்களில் ஒரு குழுவுக்கு தலைமைதாங்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. குமார் ஜா, “பாகிஸ்தான் எவ்வாறு அரச ஆதரவு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற அந்நாட்டின் உண்மையான முகத்தினை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவதுதான் பிரதிநிதிகள் குழுவின் பணி” என்று தெரிவித்தார்.