புதுடெல்லி: அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டார்.
பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.
இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ் ஜாதேதி தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில், அலி கான் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சோனிபட் ராய் காவல் நிலையத்தில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் அலி கான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அலி கான் சார்பில் ஆஜரான கபில் சிபல், “முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் போல அலி கானின் சமூக ஊடகப் பதிவுகள் எந்த வகுப்புவாத பதட்டங்களையும் உருவாக்கவில்லை. அவரது சமூக ஊடகப் பதிவுகள் தேசபக்தியின் வெளிப்பாடு. அலி கான் மஹ்முதாபாத்தின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.” என வாதிட்டார்.
“அலி கானின் பதிவுகள் ஆரம்பத்தில் போரின் கொடூரங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், அவை படிப்படியாக அரசியல் வர்ணனையை நோக்கி நகர்கின்றன. நாடு ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இந்த நேரத்தில், பிரபலமடைய முயற்சித்தது ஏன்.” என்று நீதிபதி காந்த் கேள்வி எழுப்பினார்.
அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை நிறுத்த மறுத்தது. மேலும், அலி கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மே 22, 2025க்குள்அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு (DGP) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலி கானுக்கு எதிராக வேறு யாரும் FIR பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தலை வழங்குமாறும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதி காந்த் கேட்டுக்கொண்டார்.