ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நரயன்பூரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ் உட்பட 30 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் – தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டாலு மலையில் ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட் என்ற பெயரில் 21 நாட்கள் மிகப் பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் நரயண்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் நக்சல் ஒழிப்பு படை சிறப்பு போலீஸார் கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கேசவராஜ் என்ற பசவராஜ் என்பவரும் ஒருவர்.
பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் கமாண்டர்கள் பலர் உயிரிழந்தவர்களில் இருக்கலாம் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாவோயிஸ்ட்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது
ரூ.1 கோடி பரிசு: மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ்(68) நக்சல் அமைப்பில் பொதுச் செயலாளராகவும், பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். இவர் தெலங்கானா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாரங்கலில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1கோடி பரிசு வழங்கப்படும் என என்ஐஏ மற்றும் பல மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் இவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ், பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், பசவராஜ் , உமேஷ், ராஜு, கம்லு என 8 பெயர்களில் அழைக்கப்பட்டார். மாவோயிஸ்ட் தலைவராக இருந்த கணபதி என்பவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக மாவோயிஸட் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் பசவராஜ் பொறுப்பேற்றார்.
முதல்வர் பாராட்டு: தேடுதல் வேட்டையில் 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக, பாதுகாப்பு படையினரின் வீரம் மற்றும் உறுதியை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் பாராட்டியுள்ளார். ‘‘நமது வீரர்கள் கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு ஈடு இணையற்ற அர்ப்பணிப்பையும், வீரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டம் மாவோயிஸ்ட்களுக்கு எதிரானது மட்டும் அல்ல. அமைதி மற்றும் வளர்ச்சிக்கானது. பாதுகாப்பு படையினரின் வீரதீர செயலை ஒட்டுமொத்த மாநிலமும் போற்றுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மாவோயிஸ்ட்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நரயன்பூரில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு படையினருக்கு மோடி, அமித் ஷா பாராட்டு: பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி: நமது பாதுகாப்பு படைகளின் வெற்றியால் பெருமிதம் அடைகிறேன். நக்சல் அச்சுறுத்தலை ஒழித்து, நமது மக்களின் வாழ்வில் அமைதி, முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: நக்சல் ஒழிப்பு போராட்டத்தில் முக்கிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாராயண்பூரில் நடந்த தேடுதல் வேட்டையில், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட பசவராஜ் உட்பட 27 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 30 ஆண்டுகளாக நடந்த நக்சல் வேட்டையில், பொதுச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த முக்கிய நக்சல் தலைவரை முதல்முறையாக சுட்டுக் கொன்றுள்ளனர். சாதனை படைத்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள்.