பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலான நீண்ட காலம்தான் ஒருவரை யார் என்று தீர்மானிக்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் வெறுமனே இருத்தலுக்கும், வாழ்தலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
அதை, நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதுதான் முடிவுசெய்கிறது. ஒவ்வொருவருக்கும், நான் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், லாபமோ நஷ்டமோ எனக்குப் பிடித்த பிசினஸ் வேலை செய்ய வேண்டும், அதிக சம்பளமோ குறைவான சம்பளமோ பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். கலையின் ஊடாக மக்களை மகிழ்விப்பது என ஒவ்வொரு இலக்கு இருக்கும்.

அந்த இலக்கை நோக்கிப்பயணிப்பதும், அதை அடைவதுமே வாழ்தல். இலக்கிலிருந்து விலகி வெறுமனே சம்பாத்தியத்துக்காக ஓடுவது இருத்தல்.
தமிழ் சினிமாவின் மறைந்த லெஜண்டரி இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் பிரபல வாக்கியம் ஒன்று இருக்கிறது. “நாங்க ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாம போறோம். இதெல்லாம் தாண்டி நம்ம இஷ்டப்பட்ட வேலைய செய்றோம்கிறது எவ்ளோ பெரிய பாக்கியம்” என்பதுதான்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிடித்த வேலையோ, பிடிக்காத வேலையோ, வேலை கிடைப்பதே பலருக்கும் போராட்டமாக இருக்கிறது.
இத்தகைய சூழலில், எவையெல்லாம் மகிழ்ச்சியான வேலை, எவையெல்லாம் மகிழ்ச்சியற்ற வேலை என்பது பற்றி எஸ்டோனியா (Estonia) நாட்டில் டார்டு பல்கலைக்கழக (University of Tartu) ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.
வெவ்வேறு வகையான 263 வேலைகளில் 59,000-கும் மேற்பட்டவர்களிடம் அவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை திருப்தி பற்றி ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர். மேலும், வேலையில் எது மக்களை உண்மையில் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்பதை அறிய எஸ்டோனியன் பயோபேங்க்கிடமிருந்து (Estonian Biobank) ஹெல்த் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பெற்றனர்.

ஆராய்ச்சியின் முடிவில், மதகுருமார்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியான தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்பவர்கள், உணவகப் பணியாளர்கள், வாட்ச்மேன்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள் அல்லது டிரைவர்கள் போன்றோர் தங்கள் வேலையில் குறைத்த மனதிருப்தியுடையவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், கார்ப்பரேட் மேனேஜர்கள் உயர் பதவியில் இருந்தாலும்கூட மன அழுத்தம், வேலையின் மீதான கட்டுப்பாடு இல்லாததால் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.
பெருமளவில் மதிக்கக்கூடிய வேலைகள் கூட, மன அழுத்தம், சுதந்திரமின்மை காரணமாக வெறுமையாக உணரவைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு குறித்துப் பேசிய ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பாளர் க்ட்லின் அன்னி (Ktlin Anni), “எதையாவது சாதிக்கிறோம், பிறருக்கு சேவை செய்கிறோம் என்று உணர வைக்கும் வேலைகள், உயர் பதவிகள், அதிக சம்பளத்தைக் காட்டிலும் அதிக திருப்தியைக் கொடுக்கிறது” என்று கூறினார்.