மதுரை: மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துகளை விற்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, டான்பிட் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி, ஏ.பரமசிவம், ஜி.சிவக்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இவற்றை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரக் குற்றங்களில் உரிய அதிகாரியை நியமித்து, மோசடி நிதி நிறுவனம் மற்றும் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க டான்பிட் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. டான்பிட் சட்டப்படி, மாவட்ட வருவாய் அலுவலர்தான் சொத்துகளை முடக்கவும், விற்கவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவர்களது பணிப்பளு காரணமாக சொத்துகளை முடக்கம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மோசடி நிதி நிறுவன சொத்துகளை கையகப்படுத்துவது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? புதிய பிஎன்எஸ் சட்டத்தில் எஸ்.பி.யிடம் அனுமதி பெற்று, நிதி நிறுவன சொத்துகளை முடக்கம் செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே, பொருளாதாரக் குற்றங்களில் விசாரணை அதிகாரியே சொத்துகளை முடக்கவும், விற்பனை செய்யவும் நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கும் வகையில், டான்பிட் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும்.
நிதி நிறுவன மோசடி தொடர்பான பல வழக்குகள் எஃப்ஐஆர் நிலையில்தான் உள்ளன. இந்த வழக்குகளை முடிக்க எத்தனை ஆண்டுகள் தேவை? பொருளாதாரக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கவும், சட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்யவும், அரசு உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். விசாரணை அமைப்பு சந்தித்து வரும் சிரமங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விசாரணை அதிகாரிகளின் நேரத்தைப் பாதுகாக்கவும், தேவையில்லாமல் நீதிமன்றங்களில் காத்திருப்பதை தவிர்க்கவும் காணொலிக்கான வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.