புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பு தொடர்பான 3 அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஸி அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் தொடர்ந்தது.
வக்பு சொத்துகளை நீக்கும் அதிகாரம், வக்பு கவுன்சிலில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இடம்பெறுவது, அரசு நிலமா என்பதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத நம்பிக்கையின் அத்தியாவசிய நடைமுறைகள் அல்லது மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடாமல் வக்பு வாரியத்தின் நிர்வாக அம்சங்களை மட்டுமே இந்தச் சட்டம் ஒழுங்குபடுத்துகிறது என்று மத்திய அரசு வாதிட்டது. அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வாதங்களை முன்வைத்தார்.
மனுதாரர்கள் தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் அரசியலமைப்பு கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. நீதித்துறையின் செயல்முறை இல்லாமல் வக்பு சொத்துகளை கைப்பற்றுவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது” என வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அபிஷேக் சிங்வி ஆகியோரும் இந்தச் சட்டத்துக்கு எதிராக தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இடைக்கால தடை உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
முன்னதாக, ஏப்ரல் 25 அன்று, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் திருத்தப்பட்ட வக்பு சட்டத்துக்கு ஆதரவாக 1,332 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மேலும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு நீதிமன்றம் முழு தடை விதிக்க முடியாது என கூறியது.
வக்பு திருத்தச் சட்டம் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றதை அடுத்து, கடந்த மாதம் வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த மசோதா மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது; 232 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். மாநிலங்களவையில் 128 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.