புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெப்பத்தில் தகித்து வந்த டெல்லி-என்சிஆர் பகுதிகளில் புழுதி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
நீண்ட நாட்களாக டெல்லியில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் ரம்மியமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த காற்று வீசி வருவதால் நொய்டாவுக்கு அருகே உள்ள பகுதிகளில் மரங்கள் வேருடன் பெயர்ந்து சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் சேதமடைந்தது. மேலும், டெல்லி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு சர்வதேச விமானம் மும்பைக்கும் திருப்பி விடப்பட்டது. இதனிடையே, இந்திய வானிலை மையம், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில், 34 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, காஸ்கஞ்ச், பதேபூர் பகுதிகள் கனமழையால் மிகவும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயல் தொடர்பான சம்பவங்களால் இப்பகுதிகளில் 5 பேர் உயிரிழந்தனர். கட்டிடங்கள், மரங்கள் பெயர்ந்து விழுந்ததில் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. அதனை சீரமைக்கும் பணிகளில் உள்ளூர் நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.