'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' – எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று நேற்று முன்தினம் வந்துள்ளது.

வேலுமணி வீடு

அதில், “ஜூலை 30 ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். நாங்கள் உங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். காவல்துறையிலும் எங்கள் ஆள்கள் பணியாற்றுகிறார்கள்.

உங்களிடம் நிறைய கறுப்புப் பணம் இருக்கிறது. அதற்கு எங்களிடம் ஆதாரங்கள்  நிறைய உள்ளன. எங்களுடைய அமைப்புக்கு 25-ம் தேதி மதியம் ரூ.1 கோடி  பணம் கொடுக்க வேண்டும் . காளப்பட்டி – வெள்ளானைபட்டி சாலையில் உள்ள குப்பை மேட்டில் பணத்தை வைக்க வேண்டும். நீங்களோ அல்லது உங்கள் டிரைவரோ வரலாம்.

கோவை
கோவை

எங்கள் ஆள்கள் பணப்பையை எடுத்துவிடுவார்கள். நேரத்தை தவறவிடாதீர்கள். நாங்கள் சொல்வதை கேட்காமல் காவல்துறைக்கு சென்றாலோ, எங்களை பிடிக்க முயற்சி செய்தாலோ உங்கள் குடும்பத்தில் உள்ள 3 பேரை 3 மாதங்களில் கொலை செய்வோம்.

பணப்பையில் ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸ் வைக்க வேண்டாம். இது வெறும் மெசேஜ் அல்ல. எச்சரிக்கை. அல்லாஹ் அக்பர். பாகிஸ்தான் ஜிந்தாபாத்.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தின் பின் பக்கத்தில் கூகுள் மேப் வரைபடம் ஒன்றை வைத்து அதில், ‘Drop The Bag Here’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞரணி மாநில செயலாளர் தாமோதரன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். வேலுமணிக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.