ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டம் இன்று (மே 23) லக்னோவின் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஜிதேஷ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விலகிய ஹெட் இப்போட்டியில் விளையாடினார். ஆனால் அவர் பெரிதாக சொபிக்கவில்லை. 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். ஒருபக்கம் விக்கெட்களை ஹைதராபாத் அணி இழந்தாலும், மறுபக்கம் அவர் வலுவாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். அவர் 48 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பெங்களூரு அணி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் 7 ஓவரில் 80 ரன்களை சேர்த்தனர். அப்போதுதான் முதல் விக்கெட்டையும் இழந்தது. விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஃபில் சால்ட் ஒருபக்கம் நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார். பின்னர் அரைசதம் அடித்த அவரும் 62 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து பட்டிதார் 18, ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும் வெளியேறினர். சரி ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் இருக்கிறார்கள் என நம்பினால், ஷெப்பர்ட் டக் அவுட் ஆக, டிம் டேவிட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், அவராலும் அடிக்க முடியவில்லை. 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியில் வென்று ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்த்த நிலையில், அந்த அணி தோல்வியை தழுவி உள்ளது.
மேலும் படிங்க: நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் அணியின் பிரச்சனை என்ன?
மேலும் படிங்க: ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!