IPL 2025 MS Dhoni: ஐபிஎல் 2025 தொடரின் 67வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25) மாலை நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் – கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் (GT vs CSK) மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இதுதான் இத்தொடரின் கடைசி லீக் போட்டி.
GT vs CSK: முதல் இடம் vs கடைசி இடம்
குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தாலும், இன்னும் முதலிரண்டு இடத்தை உறுதிசெய்யவில்லை. ஒருவேளை இன்றைய போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் முதலிரண்டு இடத்தை உறுதிசெய்யும். தோல்வியடைந்தால் குஜராத் நம்பர் 3 இடத்திற்கு போக கூட வாய்ப்புள்ளது. எனவே, சுப்மான் கில் இன்று தனது அணியை வெற்றிபெறச் செய்ய கடுமையாக போராடுவார்.
MS Dhoni: தோனியின் கடைசி போட்டியா…?
மறுமுனையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடைசி இடத்தில் நிறைவு செய்கிறது. ஒருவேளை இன்று சிஎஸ்கே வென்றாலும் கூட கடைசி இடத்தில்தான் நிறைவு செய்யும். மேலும், தோனி கேப்டன்ஸியில் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அடுத்த வருடம் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது உறுதியாகவில்லை எனலாம். அடுத்த சில மாதங்கள் தனது உடல்நிலையை மனதில் வைத்தே விளையாடுவது குறித்து முடிவு செய்ய முடியும் என தோனி முன்னர் கூறியிருந்தார்.
Who’s going to finish the league stage with points?
Updates https://t.co/P6Px72jm7j#TATAIPL | #GTvCSK | @gujarat_titans | @ChennaiIPL pic.twitter.com/6lnHMImCKm
— IndianPremierLeague (@IPL) May 25, 2025
GT vs CSK: டாஸை வென்ற தோனி
இந்நிலையில், இன்றைய போட்டியின் டாஸை வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு பதில் தீபக் ஹூடா உள்ளே வந்துள்ளார். குஜராத் அணியை பொருத்தவரை ரபாடாவுக்கு பதில் ஜெரால்ட் கோட்ஸிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாஸின் போது தோனி, “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இந்த ஆடுகளம் நன்றாகவும், கடினமாகவும் இருக்கிறது. 40 ஓவர்கள் முழுவதும் அது அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். இது மிகவும் சூடாக இருக்கிறது, ஒரு நல்ல ஆடுகளம் போல தெரிகிறது” என்றார்.
MS Dhoni: உடல் நிலை குறித்து தோனி…
மேலும், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கடந்த 18 ஆண்டுகள் விளையாடு வருகின்ற நிலையில் உடல் இப்போது எப்படி இருக்கிறது என தோனியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “நான் பிழைத்து (Surviving) வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய சவால் வருகிறது. இதற்கு நிறைய பராமரிப்பு தேவைப்படுகிறது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த போது, (உடல்) எனக்கு போதுமான அளவு தொந்தரவு செய்யவில்லை” என்றார். இதன்மூலம் அவர் வயது காரணமாக உடல்நலனில் பல தொந்தரவுகளை சந்தித்து வருவது உறுதியாகிறது. ஒருவேளை அவர் அடுத்தாண்டு விளையாடுவாரா இல்லையா என்பதும் கேள்விக்குறிதான்.
GT vs CSK: ஆடுகளம் எப்படி இருக்கு?
சென்னை மற்றும் அகமதாபாத் மைதானங்களை ஒப்பிட்டு தோனி பேசியதாவது,
“சென்னையில் மதியம் 3.30 – 4 மணிக்குப் பிறகு வெயில் குறைந்து மிகவும் நல்ல வானிலை இருக்கும். இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும், வறண்ட சூழலையும் பார்க்க முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய தோனி, “நாங்கள் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கிறோம், வென்றாலும் தோற்றாலும் நாங்கள் கடைசியில்தான் இருப்போம். எங்களின் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும் என நினைக்கிறோம். ஒரு மாற்றம் செய்துள்ளோம். ஹூடா மீண்டும் அஸ்வினுக்குப் பதிலாக வந்துள்ளார். அவர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) ஒரு நல்ல அணி, அவர்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடுகிறார்கள். டைட்டான லைன்களில் பந்து வீச வேண்டும், இல்லையெனில் பேட்ஸ்மேன்கள் உங்களை இந்த ஆடுகளத்தில் அடித்து ஆடிவிடுவார்கள்” என்றார்.