பாட்னா,
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத். பீகார் முன்னாள் முதல்-மந்திரியான லாலு பிரசாதின் மூத்த மகன் தேஜ் பிரதாப் (வயது 37). இவர் பீகார் முன்னாள் மந்திரி ஆவார்.
இதனிடையே, தேஜ் பிரதாபிற்கு 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா பீகார் முன்னாள் முதல்-மந்திரி தரகா ராயின் பேத்தி ஆவார். ஆனால், திருமணமான சில மாதங்களில் தேஜ் பிரதாபை ஐஸ்வர்யா பிரிந்தார். தேஜ் பிரதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை செய்வதாக குற்றஞ்சாட்டி பிரிந்து சென்றார்.
அதேவேளை, அனுஷ்கா என்ற பெண்ணை 12 ஆண்டுகள் காதலித்து வருவதாக தேஜ்பிரதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று புகைப்படத்துடன் செய்தியை பகிர்ந்தார். இந்த சம்பவம் லாலு பிரசாத் குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தேஜ் பிரதாப் கூறினார். மேலும், அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பேஸ்புக்கில் இருந்து அவர் நீக்கினார்.
இந்நிலையில், தேஜ் பிரதாபை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். குடும்பம், பாரம்பரிய கொள்கைகளுக்கு முரணாகவும், பொறுப்பற்ற முறையில் தேஜ்பிரதாப் செயல்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.