மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அந்த அணியில் நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்களுடன் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் ஆகிய அறிமுக வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எப்படி வீழ்த்தும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான முகமது கைப் தேர்வு செய்துள்ளார்.
முகமது கைப் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பின்வருமாறு:- கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.