World Test Championship Final 2025: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
WTC Final 2025: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா
தொடர்ந்து முதலிரண்டு நாள்கள் வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கப்புரியாக இருந்த ஆடுகளம், மூன்றாவது நாளான இன்று முழுவதும் பேட்டர்களுக்கு சாதகமானதாக மாறிவிட்டது. நேற்று முன்தினம் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்களில் ஆல்-அவுட்டானது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் ரபாடா 5, யான்சன் 3, மார்க்ரம் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களை அடித்தனர்.
தொடர்ந்து அன்றைய தினமே மூன்றாவது செஷனில் பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் முழு வித்தைகளையும் இறக்கினார்கள். அந்த நாளில் மட்டும் 14 விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து நேற்றைய தினம் பேட்டிங்கை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா சற்று ஆறுதல் அளித்தார். அவரின் விக்கெட்டை எடுத்ததும் தென்னாப்பிரிக்காவின் அனுபவமின்மை எட்டிப்பார்த்தது. பெடிங்கம் மட்டும் ஒருமுனையில் போராடி வந்தார்.
WTC Final 2025: முதல் இரண்டு நாள்களில் 28 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்காவும் நேற்றைய இரண்டாவது செஷனில் 138 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள், மிட்செல் ஸ்டார்க் 2, ஜாஷ் ஹசில்வுட் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக பெடிங்கம் 45 ரன்களையும், பவுமா 36 ரன்களையும் அடித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்றே பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா நேற்றே 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் நாள் 14 விக்கெட்டுகள், இரண்டாம் நாளில் 14 விக்கெட்டுகள் என இரண்டே நாளில் 28 விக்கெட்டுகள் சரிந்தன.
WTC Final 2025: தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு
மூன்றாவது நாளான இன்று ஆரம்பத்தில் லயான் ஆட்டமிழந்தாலும், கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் – ஹேசில்வுட் ஜோடி 59 ரன்களை குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு ஆட்டம் காண்பித்தது. கடைசியாக ஹசில்வுட் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
ரபாடா 4, இங்கிடி 3, மார்க்ரம், முல்டர், யான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்டார்க் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அலெக்ஸ் கேரி 43 ரன்களை அடித்திருந்தார். இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு என அமைந்தது. இன்று மதிய உணவு இடைவேளையில் இருந்து தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. ரிக்கில்டன் 6, முல்டர் 27 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மார்க்ரம் – பவுமா ஜோடி நிதானத்துடனும், பொறுப்புடனும் விளையாடி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்று வருகிறது. நாளைய தினம் தென்னாப்பிரிக்காவின் வசம் வெற்றி வசப்படலாம். இல்லையெனில் மாயாஜாலம் நிகழ்ந்து ஆஸ்திரேலியா மீண்டும் கோப்பையை தூக்கலாம்.
WTC Final 2025: ஸ்லிப்பில் முன்னாடி நின்ற ஸ்மித்
இன்றைய தினம் 2வது செஷனில், ஸ்டார்க் பந்துவீசியபோது ஸ்டீவ் ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பேட்டர்களுக்கு ஓரளவுக்கு நெருக்கமாக ஹெல்மட்டுடன் நின்று வந்தார். வழக்கமாக முதல் ஸ்லிப் பீல்டர் இருக்கும் இடத்தில் அவர் இல்லை. காரணம், நேற்று ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது முதல் ஸ்லிப்பிற்கு கொஞ்சம் முன்னாலேயே பந்து விழுந்தது. இதனால் பல கேட்ச்கள் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைக்கவில்லை. அந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியா ஹெல்மட் அணிந்து ஸ்டீவ் ஸ்மித்தை முதல் ஸ்லிப்பில் கொஞ்சம் முன்பகுதியில் நிற்க வைத்தது.
முல்டர் அவுட்டான பின்னர் பவுமா பேட்டிங் செய்ய வந்தபோது, ஸ்டார்க் பந்துவீச வந்தார். அப்போதுதான் ஸ்மித் நெருக்கமாக ஸ்லிப்பில் நின்றார். பவுமா எதிர்கொண்ட அந்த பந்து வேகமாக ஸ்மித்தின் முகத்திற்கு நேராக பறந்தது. ஆனால் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றும், பந்து முகத்தில் படாமல் தப்பிக்கவும் ஸ்மித் முயற்சித்தார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். தொடர்ந்து அவரது வலது கை விரலில் பலத்த காயமும் ஏற்பட்டது. உடனே அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
WTC Final 2025: ஸ்மித்திற்கு பலத்த காயம்
ஸ்டீவ் ஸ்மித்தின் காயம் குறித்து போட்டி வர்ணனையின் போது மூத்த நியூசிலாந்து வீரர் இயாம் ஸ்மித் கூறியதாவது, வலது சுண்டு விரலில் பலத்த காயம் (Right Middle Finger Compound Dislocation) ஏற்பட்டுள்ளதாகவும், இது மைதானத்திலேயே கண்டறியப்பட்டதை தொடர்ந்து தற்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் கூறினார். இதனால், ஸ்டீவ் ஸ்மித் நாளையும் களத்திற்கு வர மாட்டார் எனலாம். அதுமட்டுமின்றி, தற்போதை ஸ்மித்திற்கு ஏற்பட்டுள்ள காயத்தை குணப்படுத்த அறுவை சிகிச்சையும் கூட தேவைப்படலாம் என கூறப்படுகிறது. விரலில் எலும்புகள் கூடும் பகுதியில் அந்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த போட்டிக்கு பின்னர், ஜூன் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளை விளையாட கரீபியன் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா அங்கு பயணிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், வரும் நவம்பர் – டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடர் நடைபெற இருப்பதும் நினைவுக்கூரத்தக்கது.