பிரிட்ஜ்டவுன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்குதொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய லபுஸ்சேன் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்தால் ஸ்டீவன் சுமித் விலகி விட்டார்.
இரு மூத்த வீரர்கள் இல்லாதது சற்று பலவீனம் தான் என்றாலும் அவர்களுக்கு பதிலாக ஜோஷ் இங்லிஸ், சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டு உள்ளனர். கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், வெப்ஸ்டர் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த அணியில் கிரேக் பிராத்வெய்ட், கேசி கார்டி, ஷாய் ஹோப், மிகைல் லூயிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ஷமார் ஜோசப், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீலஸ், ஜோமல் வாரிகன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இந்த இரு அணிகள் இதுவரை 120 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 61-ல் ஆஸ்திரேலியாவும், 33-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 25 போட்டி டிரா ஆனது. மற்றொரு டெஸ்ட் சமனில் (டை) முடிந்தது.
1993-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றதில்லை. அந்த 32 ஆண்டுகால ஏக்கத்தை உள்ளூர் சூழலில் தீர்க்கும் நோக்கத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.