Captain Cool: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை செல்லமாக அவரது ரசிகர்கள் கேப்டன் கூல் என கூறுவது வழக்கம். எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், நிதானமாக பதற்றமின்றி களத்தில் முடிவுகளை எடுப்பதால், இவ்வாறு அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். களத்தில் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் பதற்றமின்றி கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தருவார். அப்படி இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.
குறிப்பாக 2011 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். அதனை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இதுவரை கேப்டனாக 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் முக்கிய கோப்பைகளை இந்திய அணிக்கு வென்றுக்கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். மற்ற அணி கேப்டன்கள் களத்தில் கோபம் அடைந்து பந்து வீச்சாளர்களையோ மற்ற வீரர்களையோ திட்டி பார்த்திருப்போம். ஆனால், எந்த சூழ்நிலையிலும் தோனி களத்தில் வைத்து மற்ற வீரர்களை திட்டியது கிடையாது. அந்த அளவிற்கு பொறுமையும் நிதானமும் இருப்பதாலே கேப்டன் கூல் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், கேப்டன் கூல் என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்திவிட முடியாது என்ற காரணத்தினால், டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளார் தோனி. கேப்டன் கூல் என்ற வார்த்தையை டிரேட் மார்க் செய்யும்போது பல எதிர்ப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் களத்தில் தோனியின் செயல்பாட்டை விளக்கி அவருக்கே அந்த பெயர் சொந்தம் என வாதாடி டிரேட் மார்க்கை வாங்கியதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் இனி தோனியின் அனுமதி இன்றி கேப்டன் கூல் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்த முடியாது. கேப்டன் கூல் என்ற வார்த்தை தோனிக்கே சொந்தம் என டிரேட் மார்க் வாங்கப்பட்டது அவரது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிங்க: ஐபிஎல் சீசனில் வைரலாகும் ரியாக்சன்கள்… மீம்ஸ் குறித்து மனம் திறந்த காவ்யா மாறன்
மேலும் படிங்க: சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை! இந்த 2 வீரர்களும் சிஎஸ்கேவிற்கு வருகிறார்கள்?