India National Cricket Team: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் (Edgbaston Test) தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
IND vs ENG: தோல்விக்கு காரணம் இதுதான்
இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு (Team India) மிக முக்கியமானது எனலாம். முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டு இன்னிங்ஸ்களில் முறையாக 471 & 365 ரன்கள் என மொத்தம் 836 ரன்களை அடித்தும் இந்தியா தோற்றது. அதற்கு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சு படை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அனுபவம் வாய்ந்த ஜடேஜாவும் கூட உரிய நேரத்தில் கைக்கொடுக்கவில்லை. நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்பதும் இந்தியாவுக்கு பிரச்னையாக இருக்கிறது
IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம்
ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இருந்தே முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டியில் பும்ரா இருக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. அப்படியிருக்க இந்திய அணி 2வது போட்டியில் என்ன செய்யப்போகிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்களை செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
IND vs ENG: குல்தீப் யாதவ் நிச்சயம்
இங்கிலாந்து அணி (Team England) வழக்கமாக சிறு சிறு புற்களுடன் தட்டையான ஆடுகளத்தையே இந்திய அணிக்கு வழங்கும். 5ஆம் நாளில் 4வது இன்னிங்ஸிலும் பெரிய இலக்கை அடிக்கக் கூடிய ஆடுகளத்தைதான் இந்த தொடரில் பெரும்பாலும் பார்க்கப்போகிறோம். எனவே, இந்திய அணி தனது பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி 20 விக்கெட்டையும் வீழ்த்த திட்டமிட வேண்டும். அதற்கு குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) முக்கியம். ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
IND vs ENG: 2 ஸ்பின்னர்கள் யார் யார்?
அதே நேரத்தில், வாஷிங்டன் சுந்தரும் (Washington Sundar) வலைப்பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருவதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாட இருப்பதையும் அவரே உறுதிப்படுத்தினார். ஜடேஜா – குல்தீப் அல்லது வாஷிங்டன் – குல்தீப், இரண்டில் ஒன்று உறுதி எனலாம். அதே நேரத்தில், குல்தீப் ஷர்துல் தாக்கூருக்கு பதில் விளையாடுவார். இந்திய அணி பேட்டிங்கில் வேறு யாரையும் மாற்ற வாய்ப்பில்லை.
IND vs ENG: இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள்
மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாவிட்டால் அர்ஷ்தீப் சிங்கிற்கு (Arshdeep Singh) வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இடது கை வேகப்பந்துவீச்சாளர், இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதால் அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வலைபயிற்சியில் சிராஜ் – பிரசித் கிருஷ்ணா – ஆகாஷ் தீப் ஜோடியே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டது.
பும்ரா பயிற்சி மேற்கொண்டாலும் கூட அவர் இந்த மூன்று பேரின் பந்துவீச்சு பயிற்சியை உற்று கவனித்துக்கொண்டார். பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மார்கலும் அவருடன் இருந்தார். இந்த சூழலில், இந்திய அணி ஜடேஜா/வாஷிங்டன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் (Akash Deep), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை வைத்தே பந்துவீச்சு படையை கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கான வாய்ப்பும் குறைவு.