லண்டன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் முதல் நாளில் முதலாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் தொடக்க நாளிலேயே நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதல் தடையை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. அவருக்கு தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள 38 வயதான பாபியோ போக்னினி (இத்தாலி) கடும் சவால் அளித்து வியப்பூட்டினார்.
இதனால் அல்காரஸ் 5 செட் வரை தனது ஆற்றலை செலவழிக்க வேண்டி இருந்தது. 4 மணி 37 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-5, 6-7 (5-7), 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் போக்னினியை சாய்த்தார். விம்பிள்டனில் நடப்பு சாம்பியன் முதல் சுற்றில் 5 செட் வரை போராடி வெல்வது 2010-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெட்விடேவுக்கு, 64-ம் நிலை வீரரான பிரான்சின் பெஞ்ஜமின் போன்ஜி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 3 மணி 7 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் பெஞ்ஜமின் 7-6 (7-2), 3-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2017 முதல் விம்பிள்டனில் ஆடும் மெட்விடேவ் முதல் சுற்றோடு மூட்டையை கட்டுவது இதுவே முதல் முறையாகும். 8-ம் நிலை வீரர் ஹோல்கர் ருனேவும் (டென்மார்க்) முதல் சுற்றுடன் அடங்கினார்.
மற்றபடி பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), ஜிரி லெஹக்கா (செக்குடியரசு), நுனோ போர்கஸ் (போர்ச்சுகல்), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவு: சபலென்கா முன்னேற்றம்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-1, 7-5 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீராங்கனையான கனடாவின் கார்சன் பிரான்ஸ்டினை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கினார்.
விம்பிள்டனில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-7(5), 0-2 என்ற செட் கணக்கில் விக்டோரியா தோமோவாவுக்கு எதிராக (பல்கேரியா) பின்தங்கிய போது காயத்தால் கண்ணீருடன் பாதியில் வெளியேறினார்.
மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஹேடட் மையா (பிரேசில்), டோனா வெகிச் (குரோஷியா), சோனா கர்தால் (இங்கிலாந்து), டயானா சினைதர் (ரஷியா), லேலா பெர்னாண்டஸ் (கனடா), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோர் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.