ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் காத்திருப்பை 18ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி நிறைவு செய்தது. தங்களது முதல் கோப்பையை விமர்சையாக கொண்டாட நினைத்து நிகழ்ச்சிகளை பெங்களூருவில் ஏற்பாடு செய்தனர். அவசர அவசரமாக நடத்தப்பட்ட இந்த வெற்றி விழா சரியான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்த தூயர சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல முக்கிய விவரங்களை சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் இச்சம்பவத்திற்கு முழு முதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அளித்துள்ள அறிக்கையில், “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. ஆர்சிபி அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை. அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர்.
ஜூன் 4 அன்று நேர பற்றாக்குறை இருந்ததால், காவல்துறையினரால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த விஷயத்தைச் செய்தது. காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான்; அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல. மேலும் ஒரு விரலை தேய்த்தால் மட்டுமே விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இச்சம்வத்திற்கு ஆர்சிபியே காரணம் என கூறி உள்ளது. இதனால் ஆர்சிபி அணி சிக்கலில் மாட்டி உள்ளது. மேலும், இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஐபிஎல் நிர்வாகம் தடை செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் யார் தெரியுமா…?
மேலும் படிங்க: பும்ரா, அர்ஷ்தீப், ஷர்துல் கிடையாது… மொத்தமாக மாறும் இந்தியாவின் பந்துவீச்சு படை!