வாஷிங்டன்: மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, அரசின் செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறையை (டிஓஜிஇ) உருவாக்கினார். அரசு ஊழியர்களை குறைப்பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை ட்ரம்ப் நிர்வாகத்துக்கு டிஓஜிஇ வழங்கி வந்தது.
இதனிடையே, அரசின் ‘ஒன் பிக் பியூட்டிபுள் பில்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிறுவனங்களுக்கான மானியம் ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்பாக டிஓஜிஇ பரிந்துரை செய்த அம்சங்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக, வரி குறைப்பு, சிறிய அளவில் செலவினங்களை குறைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
இதனால் அதிருப்தி அடைந்த மஸ்க், கடந்த மே மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இந்த மசோதா மீது நாடாளுமன்ற செனட் அவையில் நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா நிறைவேறினால், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை 3.3 ட்ரில்லியன் டாலர் கூடுதலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு ஏராளமான மானியம் வழங்கப்படுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்தால், எலான் மஸ்க் தனது கடைகளை மூடிவிட்டு தாய்நாடான தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல நேரிடும்’’ என பதிவிட்டுள்ளார்.
புதிய கட்சி தொடங்குவேன்: இதற்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில், ‘‘என்னுடைய நிறுவனங்களுக்கான மானியத்தை ரத்து செய்வேன் என ட்ரம்ப் கூறுகிறார். அப்படியானால் அனைத்து நிறுவனங்களுக்கும் ரத்து செய்ய வேண்டும். அமெரிக்காவின் பட்ஜெட் மசோதாவுக்கு நாடாளுமன்ற செனட் அவை ஒப்புதல் அளித்தால், மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கட்சியை தொடங்குவேன்’’ என பதிவிட்டுள்ளார்.