பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில தினங்களாக தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதலாவது டெஸ்டில் வெற்றி வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டது. 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்திய தரப்பில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 5 சதங்கள் விளாசப்பட்டன. இதில் ரிஷப் பண்டின் இரு செஞ்சுரியும் அடங்கும். இத்தனை சதங்கள் அடித்தும் ஒரு அணி தோற்பது டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்திய அணியில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய கருண் நாயர் ஜொலிக்கவில்லை. அவர்கள் ஓரளவு கைகொடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். இந்த டெஸ்டிலும் அவர்கள் ரன்குவிக்காவிட்டால், அவர்களது இடத்துக்கு ஆபத்து வந்து விடும்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ‘பாஸ்பால்’ என்ற ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றக்கூடியவர்கள். அதாவது டெஸ்டையும் ஒரு நாள் கிரிக்கெட் போன்று வேகமாக ஆடுவார்கள். அதனால் 2-வது இன்னிங்சில் குறைந்தது 400 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால் தான் பாதுகாப்பான இலக்காக இருக்கும். இந்த யுக்தியை மனதில் வைத்து கொண்டு இந்திய வீரர்கள் ஆட வேண்டியது அவசியமாகும்.
பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய ‘நம்பர் ஒன்’ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. பணிச்சுமை காரணமாக இந்த டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா? என்பது போட்டிக்கு முன்னரே தெரிய வரும்.
அதே நேரத்தில் மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்துவீசும் குல்தீப் யாதவை களம் இறக்கினால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கவாஸ்கர், ரவிசாஸ்திரி, அசாருதீன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் கூறுவதால் குல்தீப் யாதவை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. மேலும் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி இடம் பெறவும் வாய்ப்புள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்க டெஸ்டில் வெற்றியை வேட்டையாடிய அதே உத்வேகத்துடன் களம் இறங்கும். அந்த அணியில் 2-வது இன்னிங்சில் 149 ரன்கள் விளாசிய பென் டக்கெட், ஆலி போப், ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் சோபிக்காவிட்டாலும் மற்ற பவுலர்கள் கணிசமான பங்களிப்பை அளித்தனர். அதனால் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

சாதனையின் விளிம்பில் உள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் இன்னும் 73 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், நிதஷ்குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.