புதுடெல்லி: தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனமானது (National Institute of Public Cooperation and Child Development – NIPCCD) சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (Savitribai Phule National Institute of Women and Child Development) என்று அதிகாரப்பூர்மாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்கள் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜார்க்கண்டின் ராஞ்சியில் ஒரு புதிய பிராந்திய மையம் 2025 ஜூலை 4 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மையம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியங்களில் குறிப்பாக கவனம் செலுத்தும் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 ஆகியவற்றின் சிறப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளை நிறைவு செய்யும்.
முன்னதாக, இந்த மாநிலங்களின் பயிற்சித் தேவைகள் கவுகாத்தி மற்றும் லக்னோவில் அமைந்துள்ள பிராந்திய மையங்கள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டன. நீண்ட பயண தூரம் காரணமாக பல செயல்பாட்டாளர்களுக்கும் போக்குவரத்து சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணா தேவி, தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனத்துக்கு சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என மறுபெயரிடுவது இந்தியாவின் முன்னணி சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது என்று கூறினார்.
புதிய பிராந்திய மையங்களை அமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், ராஞ்சியில் புதிய பிராந்திய மையத்தின் திறப்பு விழா கிழக்கு பிராந்தியத்தில் பரவலாக்கப்பட்ட, பிராந்திய அளவில் குறிப்பிட்ட திறன் மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கும் என்று கூறினார்.
இந்த மையம் நமது முன்னணி செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவை சிறப்பாக அணுகுவதற்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அடிப்படை அளவில் நமது முதன்மை பணிகளை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா @2047 ஐ நோக்கிய நமது பயணத்தில் எந்தப் பெண்ணோ அல்லது குழந்தையோ பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை தாங்கள் உறுதி செய்வதாக அவர் மேலும் கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.