காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அது கூறியுள்ளது. எனினும், இறந்தவர்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் குறித்த எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
தொடர் போரால், கசாவின் கடலோரப் பகுதிகள் இடிபாடுகளால் நிறைந்துள்ளன. நகர்ப்புறங்களில் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. காசாவில் வசித்து வந்த 23 லட்சம் மக்களில் 90%-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போர் காரணமாக, காசாவில் ஏராளமான மக்கள் உணவு இன்றி தவிக்கும் நிலை உள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இரு தரப்பும் தற்காலிகமாக 60 நாட்களுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். காசாவில் உள்ள இஸ்ரேலிய படைகளில் குறிப்பிடத்தக்க அளவிலான படைகள் வெளியேற வேண்டும் என்றும், பதிலுக்கு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை இஸ்ரேல் வசம் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். ட்ரம்ப்பின் இந்த ஆலோசனையை இஸ்ரேல் ஏற்க மறுத்துள்ளது. ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை போர் நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் முயற்சிக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய ஹமாஸ் அதிகாரி தாஹர் அல்-நுனு, “ஓர் உடன்பாட்டை எட்டுவதில் போராளிக் குழு தயாராகவும் தீவிரமாகவும் உள்ளது. போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தெளிவாக வழிவகுக்கும் எந்தவொரு முயற்சியையும் ஏற்கத் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தைப் பற்றி விவாதிக்க ஹமாஸ் தூதுக் குழு, கெய்ரோவில் எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 50 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக, இஸ்ரேலியர்கள் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறி போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.