புதுடெல்லி: பாஜகவில் தேர்வாகி உள்ள புதிய நிர்வாகிகளுக்கு மீண்டும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அக்கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இந்த பழம்பெரும் அமைப்பின் செல்வாக்கு அதன் அரசியல் பிரிவான பாஜகவில் துவக்கம் முதல் தொடர்ந்தது. 2014-இல் அமைந்த ஆட்சியில் பிரதமரான நரேந்திர மோடிக்கு, ஆர்எஸ்எஸ் உடன் கருத்து வேறுபாடுகள் உருவானதாகத் தகவல்கள் வெளியானது. இது, 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த தேர்தலில் கடந்த இரு தேர்தல்களை விடக் குறைவான தொகுதிகளை பாஜக பெற்றது.
இந்நிலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இடையே இணக்கமானப் பேச்சுவார்த்தைகள் உ.பி.யில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இதன் பலனாக தற்போது மீண்டும் பாஜகவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கூடுவதாகத் தெரிகிறது.
தற்போது பாஜகவின் நிர்வாகிகள் தேர்தல் முடிந்து அதன் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன் பெரும்பாலான மாநிலத் தலைவகள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெருங்கியத் தொடர்பில் இருப்பவர்களாக உள்ளனர். உதாரணமாக, தெலங்கானாவின் மாநிலத் தலைவராக முன்னாள் எம்எல்சியான என்.ராமச்சந்திர ராவை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. அவர் ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் தலைவராக இருந்து வருகிறார்.
மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பதிலாக இந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல குற்றவியல் வழக்கறிஞரான ராவ், மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் நெருங்கிய சகாவாக இருந்தார்.அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும் பாஜக மாநிலத் தலைவராக பி.வி.என் மாதவ் பொறுப்பேற்றுள்ளார். என்.டி.ராமராவின் மகளும் காங்கிரஸிலிருந்து வந்த டி.புரந்தேஸ்வரிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதவும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். இவரது தந்தை பி.வி.செல்லபதி மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்த நிறைய உழைத்தவர். இவர், 1980-இல் ஐக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் பாஜக தலைவராகவும் இருந்தார். மாதவ் 2003-இல் பாஜகவின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, அவர் 2007 முதல் 2010 வரை மாநில பொதுச் செயலாளராகவும், 2010 முதல் 2013 வரை தேசிய செயலாளராகவும் இருந்தார்.
உத்தராகண்ட் பாஜகவின் தற்போதைய மாநிலத் தலைவரான மகேந்திர பட் மீண்டும் மாநிலத் தலைவராகி உள்ளார். அவரது அரசியல் வாழ்க்கை மாணவர் பருவத்தில் ஏபிவிபியில் துவங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் தலைவரான ராஜீவ் பிண்டலுக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரும் ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர் மற்றும் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
மேலும், பல நிர்வாகிகள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்களாகவும், அதன் தொடர்பில் நீண்ட காலமாக இருந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மீண்டும் பாஜகவில் கோலேச்சும் நிலை உருவாகி உள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2014-இல் அமைந்தது முதல் காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இக்கட்சியில் இணைந்தனர். இவர்களுக்கு பாஜக பல தேசியப் பதவிகளை அளித்து அலங்கரித்திருந்தது.
இதனால், புதியவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அளவில், அவர்களுக்கு பாஜக இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு பின் தேர்வாக உள்ள பாஜகவின் தேசியத் தலைவரும் தீவிர ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவராக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.