சென்னை: “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆறுதலாக பேசினார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பியிடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்தார்.
அஜித்குமாரின் தாயாரிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும். நாங்களும் உங்களுக்குத் துணை நிற்போம். இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தனது மகனை இழப்பது என்பது மிகப் பெரிய கொடுமையான விஷயம். இது யாராலும் மன்னிக்க முடியாதது. பெற்ற தாய்க்குத்தான் அந்த வலி தெரியும்.
உங்களுக்கு நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. நீங்கள் மனம் தளராமல் இருங்கள். நீங்கள் மன நிம்மதியோடு இருந்தால்தான் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். நீதிமன்றத்திலும் அதிமுக சார்பில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும். மனம் தளராதிருங்கள். என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
அஜித்குமாரின் தம்பியிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “இந்த நிகழ்வு மீள முடியாதது. ஒரு கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. உங்கள் அண்ணன் இறப்புக்கு யார் யாரெல்லாம் காரணமோ, அவர்கள் தண்டிக்கப்படும் வரை அதிமுக உங்களுக்குத் துணை நிற்கும். நீதிமன்றத்தின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும். தைரியமாக இருக்கவும். என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பேசினார்.