லண்டன்,
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ காப் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்ட கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.