மதுரை: சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த விடியல் வீர பெருமாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசிடம் எவ்வித முறையான அனுமதியுமின்றி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கின்றனர்.
சில நிறுவனங்கள் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சிறிய நீரோடைகள், விவசாய கிணறுகள் மற்றும் குளம் போன்றவற்றிலும் நிலத்தடி நீர் அடி ஆழத்துக்கு சென்று விட்டது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், குடிநீருக்கு பொதுமக்கள் அலையும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரிக்கும் கம்பெனிகள் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றன.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுத்து உச்சபட்ச இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன், நீர்வளத்துக்காக நிலத்தடி நீர் சுரண்டப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
இந்த நோக்கத்துக்காக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வணிக ரீதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இதில் தோல்வியடைந்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படும்.
இதனால் சட்டவிரோதமாக வணிக ரீதியில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சட்ட விரோதமாக நிலத்தடி நீர் மட்டும் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.