போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று திருப்புவனம் வந்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினார். அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர்.

தொடர்ந்து ஏடிஎஸ்பி, ஆய்வாளர், அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்த கோயில் பணியாளர் உள்ளிட்ட பலரிடம் 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் இன்று 9 மணிக்கு மீண்டும் திருப்புவனத்துக்கு வந்த அவர், நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, விசாரணையை தொடங்கினார். கோயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்குமார் மரணம் முதல் அரசின் நடவடிக்கை வரை.. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். திரும்பி வந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகை. ரூ.2,500 காணவில்லை என புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர்.

மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித் குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஜூன் 30-ம் தேதி திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் விசாரணை நடத்தினார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஐஜி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அஜித்குமாரின் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும், ரத்தக் கசிவு இருந்ததும் தெரியவந்தது. அன்று இரவே இது கொலை வழக்காக மாற்றப்பட்டு, தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரனை தவிர்த்து காவலர்கள் மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதேநேரம், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், அரசே தனது குடிமகனை கொலை செய்துவிட்டதாக அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணையை தொடங்க உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று திருப்புவனம் வந்த அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகங்கை மாவட்ட போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் இரவு வரை பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

இதனிடையே மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்தும், எஸ்பி ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் அரசு உத்தரவிட்டது. மேலும் அஜித்குமாரின் தாயார், சகோதரரிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி, தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதனிடையே நேற்று அஜித்குமாரின் தாயார் மாலதியை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முதல்வரின் உத்தரவின்படி 3 சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டாவையும் சகோதரர் நவீன்குமாருக்கு ஆவின் நிர்வாகத்தில் டெக்னீஷியன் பணிக்கான ஆணையையும், திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி அப்போது உடனிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.