Shubman Gill Century: ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் (England vs India) 2வது டெஸ்ட் போட்டி பட்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) பந்துவீச்சை தேர்வு செய்தது.
IND vs ENG: பலமான நிலையில் இந்தியா
இந்திய அணியின் (Team India) முதலில் பேட்டிங் செய்து நேற்றைய முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை 310 ரன்களை எடுத்திருக்கிறது. சுப்மான் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால் 87, கேஎல் ராகுல் 2, கருண் நாயர் 31, ரிஷப் பண்ட் 25, நிதிஷ்குமார் ரெட்டி 1 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்தின் பந்துவீச்சில் வோக்ஸ் 2, ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
IND vs ENG: இந்திய அணி இதை செய்ய வேண்டும்?
கில் – ஜடேஜா ஜோடி 99 ரன்களுடன் 6வது விக்கெட்டுக்கு சிறப்பான பார்டனர்ஷிப்பை அமைத்திருக்கிறது. இந்த பார்டனர்ஷிப் இன்றும் தொடரும், தொடர வேண்டும். இதற்கு பின் வாஷிங்டன் சுந்தர் நம்பர் 8இல் விளையாடுவார். இவரும் பேட்டிங்கில் பங்களிப்பு அளித்தால் நிச்சயம் இந்திய அணி 450-500 வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. அதுவே இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஸ்கோராக இருக்கும். ஆகாஷ் தீப் – சிராஜ் – பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் பேட்டிங்கில் பங்களிப்பு அளிக்க வேண்டும். ரன்களை அடிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் 30 பந்துகளை எதிர்கொண்டாலும் அது இந்தியாவுக்கு நன்மையே.
IND vs ENG: சுப்மான் கில்லின் சரியான பதிலடி
இன்று தேநீர் இடைவேளை வரை அல்லது இரண்டாவது செஷனில் பாதி வரை இந்தியா பேட்டிங் செய்தாலே இங்கிலாந்துக்கு சிக்கல்தான். முதல் போட்டியில் செய்தது போல் முதல் கிடைத்த மொத்த பலனையும் ஒரே செஷனில் தூக்கி எறிந்துவிட்டு வராமல் இருந்தால் இந்தியாவுக்கும் சிக்கல் இல்லை. இவை ஒருபுறம் இருக்க, நேற்று சுப்மான் கில்லின் இன்னிங்ஸை குறிப்பிட்டே ஆக வேண்டும். இளம் வீரரை நம்பி டெஸ்ட் கேப்டன்ஸி பொறுப்பை கொடுப்பது சரியா?, துணை கண்டத்திற்கு வெளியே அவர் சாதித்தது என்ன? SENA நாடுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லையே போன்ற கேள்விகள், விமர்சனங்கள் அனைத்தும் இந்த தொடருக்கு முன் சுப்மான் கில்லின் (Shubman Gill) மீது வைக்கப்பட்டது.
IND vs ENG: சுப்மான் கில்லின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்
ஆனால், சுப்மான் கில் தன் மீதான விமர்சனங்களுக்கும், தன் நோக்கிய கேள்விகளுக்கும் தனது பேட்டால் மட்டுமே பதிலடி கொடுத்திருக்கிறார். அதுவும் பலமான பதிலடியை கொடுத்திருக்கிறார். கோலி 2014இல் தனது முதல் டெஸ்ட் கேப்டன்ஸி போட்டியின்போது சதம் அடித்ததை போலவே, 11 ஆண்டுகளுக்கு பின் சுப்மான் கில்லும் அவரது முதல் டெஸ்ட் கேப்டன்ஸி போட்டியில் சதம் அடித்து மிரட்டியிருந்தார். 2018இல் விராட் கோலி எட்ஜ்பாஸ்டனில் அடித்த சதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல், நேற்று சுப்மான் கில்லின் இன்னிங்ஸூம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 216 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 114 ரன்களை அடித்து ஒரு நேர்த்தியான டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்தி உள்ளார்.
IND vs ENG: சுப்மான் கில்லுக்கு உச்சத்தில் சுக்கிரன்…
டெஸ்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தோனி, விராட் கோலிக்கு அடுத்து கில் கேப்டனாக இருந்து அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்தில் இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளின் முதல் நாளிலேயே சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையை கில் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்ததன் மூலம், திலிப் வெங்சர்கர், ராகுல் டிராவிட், முகமது அசாரூதின் ஆகியோரின் பட்டியலில் இணைந்துள்ளார். இத்தனை பெருமைகளை பெற்றிருக்கும் கில் இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்டையும் வென்று, இங்கிலாந்து மண்ணில் தொடரையும் கைப்பற்றிவிட்டால் நிச்சயம் அவருக்கு சுக்கிரன் உச்சத்தில்தான் இருக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.