அவுரங்காபாத்,
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம்பெண் ஒருவர், திருமணமான 45 நாட்களில் கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, புதியதாக திருமணமான குஞ்சா தேவி, தன்னுடன் தகாத உறவில் இருந்த 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து, தனது கணவனான பிரியான்சுவை (25) கொல்ல கூலிப்படையை பயன்படுத்தி உள்ளார்.
இந்த விவகாரத்தில் குஞ்சா தேவி மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகி உள்ள ஜீவன் சிங்கை தேடி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே ஜீவன் சிங் மற்றும் குஞ்சா தேவி தகாத உறவில் இருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் அதை விரும்பாமல் கட்டாயப்படுத்தி, நபிநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பர்வான் கிராமத்தைச் சேர்ந்த பிரியான்சுவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
இதையடுத்து தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ குஞ்சா தேவி முடிவு செய்தார். இதனையடுத்து கடந்த 25ம் தேதியன்று தனது தங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டு ரெயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியான்சு, நவிநகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார். அப்போது மனைவியை தொடர்புகொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார்.
தொடர்ந்து, வீட்டை நோக்கி புறப்பட்ட பிரியான்சுவை , திடீரென இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியபோது, குஞ்சா தேவி கிராமத்தை விட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், பெண்ணின் தொலைபேசி தகவல்களை எடுத்து ஆய்வு செய்தனர்.
அதில், குஞ்சா தேவி தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவரது தொலைபேசி எண் விவரங்களை ஆராய்ந்ததில், அவர் கொலையாளிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது அம்பலமானது.
இதனைத்தொடர்ந்து குஞ்சா தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகி உள்ள ஜீவன் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக காவல் கண்காணிப்பாளர் (SP) அம்ரிஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.