சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேகவெடிப்பு காரணமாக இமாச்சப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான், “மேக வெடிப்புகள் மற்றும் கனமழை பேரிடர்களால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காணாமல் போயுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழ்வதால், அதை எதிர்கொள்ள மாநில மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் சிவில் பாதுகாப்புப் பயிற்சி பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஜூலை 8-ம் தேதி வரை இமாச்சலில் கன முதல் மிக கனமழை வரை இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானலை ஆய்வு மையம், மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.மண்டி மாவட்டத்தில், பியாஸ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவிலும் கனமழை பெய்து வருகிறது. பேரிடர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.