IND vs ENG : 6 பேர் டக்அவுட் ஆகியும் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து அணி

IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்ததுடன் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். இதுவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு புதிய சாதனையாகவும் அமைந்தது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 6 பேட்ஸ்மேன்கள் டக்அவுட்டாகி, அந்த அணி 400 ரன்களுக்கு  குவிப்பது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி 84-5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் தான் இருந்தது. ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடியதால் அந்த அணியை சரிவில் இருந்து மீண்டது. ஜேமி ஸ்மித் – ஹாரி ப்ரூக் ஜோடி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஹாரி ப்ரூக் 158 ரன்களும், ஜேமி ஸ்மித் 184 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் ஒரு கட்டத்தில் பாலோஆன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி கிரேட் கம்பேக் கொடுத்தது. 

இவர்கள் இருவரின் ஆட்டமிழப்புக்கு பிறகு இங்கிலாந்து அணியின் எஞ்சிய விக்கெட்டுகளும் சீட்டுக்கட்டுபோல் சரிந்தது. இந்திய அணியின் முகமது சிராஜ் திடீரென வேகபந்துவீச்சில் விஸ்வரூபம் எடுத்தார். அவரின் அபாரமான பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். முடிவில் இங்கிலாந்து 407 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிளாட்பிட்ச் என்பதால் பேட்டிங் ஆட சொர்கப்பூமியான மைதானம் எட்ஜ்பஸ்டன். அந்த மைதானத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல, இதனால் முகமது சிராஜுக்கு இந்திய அணியின் பிளேயர்களிடமிருந்து பாராட்டுக்கு குவிகிறது. 

சிராஜ் வெகு சிறப்பாக பந்துவீசியதாக இந்திய அணியின் முகமது ஷமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்திய அணி இப்போது 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 28, கருண் நாயர் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.