சென்னை: ‘அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளுமன்ற தேர்தல்தான்’ என பூத் கமிட்டி கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட மூத்த நிர்வாகிகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பாஜக பூத் கமிட்டியை வலிமைப்படுத்தும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முருகர் பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்தினாலும், அதற்கு சிறப்பு சேர்த்தது பாஜகதான். அந்த மாநாட்டைக் கண்டு திமுகவுக்கு தூக்கம் வரவில்லை. அதனால்தான் இன்று, ஓரணியில் தமிழ்நாடு என திமுக பயணத்தை தொடங்கியிருக்கிறது.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கோட்டைக்கு வர வேண்டும். அதற்கானஅடித்தளம்தான் இந்த பூத் கமிட்டி கூட்டம். ஒரு தொகுதிக்கு 300 பூத் இருக்கும். ஒரு பூத்துக்கு குறைந்தது 12 பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அதன்படி, ஒரு தொகுதிக்கு 3,600 பேரை பூத் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். அப்படி சேர்த்தால், 2026-ல் உறுதியாக ஆட்சி மாற்றம் வரும். அதற்கான வியூகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்த்துக் கொள்வார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வாங்கிய வாக்குகளையும், திமுக வாங்கிய வாக்குகளையும் கூட்டிப் பார்த்தால் 24 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் இருக்கிறது. எனவே, ஒரு பூத்துக்கு 37 வாக்குகள் கூடுதலாக பெற்றால், நாம் உறுதியாக 202 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம். இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட்டால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் முன்னாள் மற்றும் இன்னாள் மாவட்ட தலைவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். நமது நோக்கம் 2026 கிடையாது. 2029 நாடாளுமன்றம்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நிறைய எம்.
பி.க்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்கக் கூடாது. நீங்கள் பலமாக இருந்தால்தான் அதிமுகவினர் உங்களை வீடுதேடி வந்து அழைப்பார்கள். எனவே, அவ்வாறு அழைக்கும் வகையில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மண்டல மாநாடுகள்: இதற்கிடையே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக பாஜக சார்பில் மண்டல மாநாடுகள் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், நெல்லையில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மண்டல மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, மதுரையில் செப்.13, கோவையில் அக்.26, சேலத்தில் நவ.23, தஞ்சாவூரில் டிச.21, திருவண்ணாமலையில் 2026 ஜன.4, திருவள்ளூரில் ஜன.24-ம் தேதி என 7 இடங்களில் மண்டல மாநாடுகள் நடைபெற உள்ளன.