சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முக்கிய தொடக்க வீரரான டெவன் கான்வே அணியில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவல்கள் தற்போது ஐபிஎல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் சென்னை அணி ஒரு பிளாக்பஸ்டர் ட்ரேட் ஒப்பந்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், இந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் தெவாத்தியா ஆகிய இருவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஐபிஎல் சீசனில் சென்னை அணி மிகவும் மோசமான விளையாடி இருந்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ரசிகர்களையும் நிர்வாகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஐபிஎல் 2026க்கு இப்போது இருந்தே தயார் ஆகி வருகிறது. நியூசிலாந்து வீரரான டெவன் கான்வே, 2023ம் ஆண்டில் ரூ.6.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் அந்த ஆண்டு சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். 6 அரைசதங்களுடன் 672 ரன்கள் எடுத்தார். ஆனால் 2025 சீசனில், வெறும் 6 போட்டிகளில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து, அவரது ஸ்டிரைக் ரேட் 127 என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்த ஃபார்ம் குறைவு மற்றும் அதிக சம்பளத்தின் காரணமாக, சென்னை அணி அவரை டிரேட் செய்ய முடிவு எடுத்துள்ளது.
சிஎஸ்கேவில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் தெவாத்தியா?
குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2025ஆம் ஆண்டில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் 166.25 ஸ்டிரைக் ரேட்டுடன் 133 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தரின் பவுலிங் ஐபிஎல்லில் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் சென்னை அணிக்கு சிறந்த வீரராக இருப்பார். அதே போல மற்றொரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் லெக்-ஸ்பின்னர் ராகுல் தெவாத்தியா 2025ம் ஆண்டு குஜராத் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 12 இன்னிங்ஸ்களில் 99 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இருப்பினும் கடைசி கட்டத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அணிக்கு வெற்றியை தேடி தருவார். குறிப்பாக 2020ஆம் ஆண்டில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தி இருந்தார்.
CSK மற்றும் GT இடையே இந்த ட்ரேட் நடக்குமா?
சுந்தர் மற்றும் ராகுல் தெவாத்தியா ஆகிய இருவரும் சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பிரச்சனைக்கு மாற்றாக, பந்துவீச்சு மற்றும் ஃபினிஷிங் வீரர் தேவையை இந்த பரிமாற்றம் மூலம் நிறைவேற்ற முடியும். அதேபோல் குஜராத் அணி கான்வேயை டாப் ஆர்டர் ஹிட்டராக பயன்படுத்தி, அவரின் அதிரடியான தொடக்க ஆட்டத்தால் பலனடையலாம். இந்த பரிமாற்றம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், IPL வட்டாரங்களில் இது மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.