“75 வயதில் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்” – மோகன் பாகவத் கருத்தை முன்வைத்து மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

புதுடெல்லி: “75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்கள் வேலை செய்ய விட வேண்டும்,” என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி மறைந்த மோரோபந்த் பிங்களே குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “உங்களுக்கு 75 வயது ஆகிறது என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். மிகவும் நகைச்சுவையுடன் பேசக்கூடிய மோரோபந்த் பிங்களே ஒருமுறை பேசும்போது, ’75 வயதுக்குப் பிறகு உங்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டால் அதற்கு, நீங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள். எனவே, மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்’ என கூறினார்.

தேச சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட போதிலும், 75 வயது ஆகிவிட்டால் அந்தப் பொறுப்பில் இருந்து விருப்பத்தோடு விலகிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.” எனப் பேசினார்.

மோகன் பாகவத்தின் இந்த உரையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விருதுகளைத் தேடும் ஏழை பிரதமருக்கு இது எப்படிப்பட்ட ஒரு செய்தி. பிரதமர் மோடி நாடு திரும்பியதும், செப்டம்பர் 17, 2025 அன்று அவருக்கு 75 வயதாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் நினைவூட்டி உள்ளார். ஆனால், பிரதமர் பதிலுக்கு அவரிடம், அவருக்கும் செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று சொல்லலாம்! ஒரு அம்பு, இரண்டு இலக்குகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

1950, செப்டம்பர் 11-ம் தேதி பிறந்த மோகன் பாகவத்தக்கும் 75 வயது முடிய உள்ளதை சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார்.

எனினும், பாஜகவில் ஓய்வு பெறுவதற்கென குறிப்பிட்ட வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரான அமித் ஷா 2023-ல் கூறி இருந்தார். மேலும், “நரேந்திர மோடி 2029 வரை வழிநடத்துவார். அவர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை” என அமித் ஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.