ஓய்வு பெற்ற பின்… விராட் கோலியை சீண்டுகிறாரா கௌதம் கம்பீர் – அப்படி என்ன பேசினார்?

India National Cricket Team: கடந்த 2024ஆம் ஆண்டில் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிக மோசமான ஆண்டாகவே இருந்தது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி பல பின்னடைவுகளை சந்தித்து வந்தது.

Team India: இந்திய அணியின் ஏற்ற இறக்கங்கள்

இலங்கையில் ஓடிஐ தொடரில் தோல்வி, உள்நாட்டில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் (0-3), 2016ஆம் ஆண்டு முதல் தக்கவைத்திருந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது என தொடர் தோல்விகளை இந்திய அணி சந்தித்தது. ஆனால், இந்த தோல்விகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தாண்டின் தொடக்கத்திலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

Gautam Gambhir: அதிகாரமிக்க கம்பீர்

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடந்துவந்த போது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்ததும் இந்திய கிரிக்கெட்டில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது கம்பீர் இளம் வீரர்களுடன் புதிய இந்திய அணியை கட்டமைத்து வருகிறார். இந்திய அணியில் அதிகாரமிக்கவராக கம்பீர் தோற்றமளிக்கிறார் எனலாம். தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரும் 1-1 என்ற நிலையில் உள்ளது, இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன. இதுதான் இந்திய அணியில் இவரின் வருங்காலத்தை தீர்மானிக்கும் தொடர் எனலாம். 

Virat Kohli: பிசிசிஐ விதி – விராட் கோலி எதிர்ப்பு

முன்னதாாக பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய அணி வீரர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் குடும்பத்தினருடன் 14 நாட்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதாவது, வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருக்க வீரர்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த விதிகளை விராட் கோலி விமர்சித்திருந்தார்.

Gautam Gambhir: விராட் கோலி சொன்னது என்ன?

இந்நிலையில், சமீபத்தில் சதேஷ்வர் புஜாரா உடனான நேர்காணலில், விராட் கோலி தெரிவித்த கருத்திற்கு எதிராக கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார். அந்த நேர்காணலில், “குடும்பம் முக்கியமானது. ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இங்கே வந்துள்ளீர்கள். இது சுற்றுலா அல்ல. நீங்கள் ஒரு பெரிய நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். டிரஸ்ஸிங் ரூமிலோ அல்லது இந்த சுற்றுப்பயணத்திலோ நாட்டைப் பெருமைப்படுத்தும் வாய்ப்பைப் பெறும் நபர்கள் மிகக் குறைவு. எனவே ஆம், எங்களுடன் குடும்பங்கள் இல்லாததை நான் எதிர்க்கவில்லை” என்றார். 

மேலும் தொடர்ந்த அவர், “குடும்பங்கள் இருப்பது முக்கியம், ஆனால் உங்கள் கவனம் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவதில் இருந்தால், வேறு எந்த விஷயத்தையும் விட அது உங்களுக்கு பெரிதாக இருந்தால், நீங்கள் அந்த இலக்கை நோக்கி உறுதிபூண்டிருந்தால் மற்ற அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்த நோக்கமும் இலக்கும் வேறு எந்த விஷயத்தையும் விட முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு விராட் கோலிக்கு நேர் எதிரான கருத்தை கம்பீர் தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுக்கு பின்னணியில் கம்பீர்தான் இருக்கிறார் என வதந்தி பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.